Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, August 26, 2009

தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழனின் தலையெழுத்தோ இன்று ???????.....

தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழனின் தலையெழுத்தோ இன்று ???????....




இங்கு வாருங்கள் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்..., பயங்கரவாத பிடியிலிருந்து உங்களை மீட்டுகொள்ளுங்கள்.. நம்பிவருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.., யுத்தம் நிறைவடைந்து ஒரே மாதத்தில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவீர்கள்...... இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் வன்னி மக்களை தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வரவழைப்பதற்காக அன்று பயன்படுத்திய உறுதி மொழிகள். அந்த உறுதி மொழிகள் யுத்தம் நிறைவடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டநிலையிலும் வெறும் உறுதி மொழிகளாகவே இருக்கின்றன.

ஆம்! தற்போது யுத்தம் முடிந்து மாதங்கள் பல கடந்து விட்டன., ஏன் யுத்தம் நிறைவடைந்து பல தேர்தல்களும் நடந்து விட்டன, ஆனால் இடம்பெயர்ந்த மக்களோ இன்னும் அகதிகளாக..... முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளாக... வாழ்கை நடத்துகின்றனர் ...இல்லை இல்லை வாழ்வைக் கடத்துகின்றனர்.

இலங்கை அரசு கூறிய உறுதி மொழிகள் எங்கே.... காற்றோடு காற்றாய் கலந்து விட்டதா? இல்லை யுத்த வெற்றியில் மறைந்துவிட்டதா? சிந்திப்பதற்கு கூட திராணியில்லாமல் அகதி மக்கள்... மறையாத யுத்த வெற்றியில் தொடந்தும் சிங்கள மக்கள்.. இது தான் இன்று வரைக்கும் இலங்கையின் குறிப்பாக தென்னிலங்ககையின் நிலைப்பாடு.
யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது, பயங்கரவாத தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பல இரகசிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆம் உண்மைதான் ஆனால் தமிழ் மக்களின்
எதிர்காலம்?......

நடந்தவை நடந்து முடிந்து விட்டது நடந்ததையே மீண்டும் மீண்டும் கதைப்பதால் கொல்லப்பட்ட மக்களோ, இழக்கப்பட்ட சொத்துக்களோ, மீண்டும் கிடைக்கப்போவதில்லை ஆனால் சரியான நடைமுறையினை மேற்கொண்டால் நிச்சியம் தொலைக்கப்பட்ட வாழ்க்கையில் சிறு பகுதியேனையும் மீட்டெடுத்துவிடமுடியும் என்ற நம்பிக்கை இன்னமும் விட்டுப்போய்விடவில்லை
அந்த நம்பிக்கையிலேயே இன்னும் உயிரைச் சுமந்தபடி அகதி மக்கள்... அதனை தமது அரசியலுக்காகவே பயண்படுத்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.
அகதி மக்களுக்காக இன்று தென்னிலங்கையில் தற்போது பலர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடும்போக்கு கொள்கைகளைக் கொண்ட பெரும்பான்மையினர் கூட இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதனை எண்ணிபார்க்கையில் எனக்கு ஆச்சரியம்தான். ஆடு நனைவதென்று ஓநாய் அழுததாம் அந்த கதையாக தமிழ் மக்களின் ஆறாத இந்த துயர்தீர்க்க தயாராகிவிட்டனர் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் சிலர். உண்மையாக தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குவதுடன் அவர்கள் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் வெற்றி பெற இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்.



இன்றைய நாளில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 100 நாட்களாகப் போகின்றது. இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கமாய் எழுந்துநிற்கின்றது
தற்போதைய சூழ்நிலையில் முகாம் மக்களை மீளக்குடியேற்ற தடையாக இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்கிறது இலங்கை அரசாங்கம்.
ஒன்று கண்ணிவெடி மற்றது முகாம்களில் இருக்கும் விடுதலை புலி உறுபு;பினர்கள்... ஆம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களே அவை ஆனாலும் ஏற்க முடியாதுள்ளது., காரணம் யதார்த்த நிலைமை...

யுத்தம் முடிவடைந்து 100 நாட்களை தொடும் இந்த வேளையில், யுத்ததின் பின்னரும் படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு.., வடக்கின் முக்கிய பதவிகளுக்கு இராணுவ தரப்பினரின் நியமனம், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அகதி மக்களை சந்திப்பதற்கான தடை, ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுப்பு போன்றவிடயங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.
தென்னிலங்கை அரசியலிலோ எதிர்கட்சிகள் 80 வீதம் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்து விட்டதாகவும் எனவே மக்களை அந்த பகுதிகளில் மீளக் குடியேற்றும் படியும் நாளாந்தம் கூக்குரலிடுகின்றனர். இது அவர்களின் அரசியல் இலாபத்திற்காக கூறுகிறார்களோ அல்லது அகதி மக்கள் மேல் கொண்ட அனுதாபத்தினால் கூறுகிறார்களோ தெரியாது? எதுவாகினும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.




அத்துடன் அந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு 80 வீதம் கண்ணிவெடி அகற்றப்பட்ட பூமியில் வாழ்வது கடினமில்லை என்ற வாதத்தினையும் முன்வைக்கின்றனர். இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகியினும் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைமையினையும் நாம் சிந்திக்க வேண்டும்.
விடுதலை புலிகள் அனைவரும் முற்றாக இதுவரையில் ஒழிக்கப்படவில்லை என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்னும் சில விடுதலை புலி உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக கலந்துள்ளார்கள் என்ற அரசாங்கத்தின் கூற்றும் சரியானதே அதற்காக அடிப்படை வசதிகள் அறவே அற்ற நிலையில் சுமார் 3 இலட்ச மக்களும் முட்கம்பி முகாம்களுக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமையானதே.
அடிப்படை வசதிகளற்ற நிலையில் உணவிற்காக, குடி நீருக்காக, மலசலம் கழிப்பதற்காக ஏன் வைத்திய உதவிகளுக்காக வரிசையில் நிற்கும் இந்த மக்கள் தற்போது மரணத்திற்காகவும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அதுவே அகதி முகாமின் தற்போதைய நிலைமை எனவும் அவர் குறிப்ப்பிட்டார்.




இவ்வாறான சூழ்நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்ததும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதும் இடம்பெயர்ந்த மக்களை மிக விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், எப்பொழுது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு எப்போது தாம் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவோம் என் ஏக்கத்துடனேயே அகதி மக்கள்.
இது இவ்வாறிருக்கு முகாமிற்குள்ளே நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றனது. பிச்சை எடுத்தான் பெருமாள் அதை பிடுங்கினதாம் அனுமான் என்ற கதையாய் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு பலர் பல்வேறு முறையில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

இலங்கையிலேயே அகதி முகாம்களில் காணப்படும் கடைத் தொகுதிகளில்தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு கொடுக்கும் பால்மாவிலிருந்து அரிசி, பருப்பு என இந்த விலை கொள்ளை தொடர்கிறது. இந்த கடை உரிமையாளர்கள் பலர் இந்த 3 மாத இடைவெளியில் இலட்சாதிபதிகளாக மாறிவிட்டதாகவும் நமக்கு அறியகிடைக்கின்றது.
அது மாத்திரமா அங்கு உள்ள மக்கள் உளரீதியான பாதிப்புக்கள், மனஅழுத்தங்கள் என்பவற்றிற்கு உள்ளாகி தற்கொலை முயற்சிகளையும் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மக்கள் விசாரனைக்கென அழைத்து செல்லப்படுவது, பெண்கள் பாலியல் வல்லுறவிட்குட்படுத்தப்படுவது, மர்மமான முறையில் பலர் கொலை செய்யப்படுவது, போன்றன அரங்கேறும் இந்த சந்தர்ப்பத்தில் தொற்று நோயும் தொற்றிக் கொண்டது அகதி மக்களை..
இந்நிலையில் சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போதில்லை என்ற நிலைப்பாட்டில் சகோதர நிறுவனம் தனது அடாவடித்தனங்களை அழகாக அரங்கேற்றி வருகின்றது. முகாம் மக்கள் வாழ்க்கை சிதைவடைந்து போயுள்ள இந்த நிலையில் அவர்களை சினம் கொண்டு பார்க்கிறது இந்த அரசு.

சர்வதேச நிதியுதவிக்காக, சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவும் முகமாக ஆங்காங்கே பொறுக்கி எடுக்கப்பட்ட சில மக்களை மீளக்குடியேற்றிவரும் அரசாங்கத்தின் திட்டம் தான் என்ன?
முகாம் மக்களை அடைத்து வைத்து கொண்டு அங்கு காணப்படும் சுமார் 1,75,000 வாக்குகளை தமக்கு சார்பாக பயண்படுத்தி கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, குறித்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவுமே இந்த அரசாங்கம் மக்களை தடுத்து வைத்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதுவே யதார்த்த உண்மையுமாகும்.

எது எப்படியோ இன்றை காலத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது தமது மீள்குடியேற்றம் தமிழ்மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுமேயாகும்.
அரசியல் தீர்வை பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர்தான் அரசியல் தீர்வு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆகவே தீர்வு என்பது தற்போதைக்கு கிடையாது என்பது நிச்சயம்.
அதுவும் அரசியல் கபடநாடகமென்றே பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காரணம் சமாதானத்தை விரும்பும், அரசியல் தீர்வை விரும்பும் எவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ளதால் அவர் இவ்வாறான கருத்தினை தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படியோ அவர் இப்படி கூறாதவிடத்துகூட அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று எழுதப்படாத வாசகம் பொறிக்கப்பட்டுவிட்டதாகவும் பலர் நகைப்புடன் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் தற்போதையஒரே எதிர்பார்ப்பு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டாலும் தாம் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமரவேண்டும் என்பதேயாகும். இதற்கு பெரும் தடை கண்ணிவெடிகள் இலங்கை அரசாங்கம் யாரை ஏமாற்றி எவ்வளவு பணம் பெற்றாலும் கேள்வி கேட்க முடியாத நிலையில் காணப்படும் நாங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதாவது கண்ணிவெடிகள் மிக விரைவில் அகற்றப்படவேண்டும், தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்பதேயாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் போராட்டம் நடத்தும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மீளக்குடியேற வேண்டும் என்பதே ஏனைய தமிழ் மக்களின் பிரதான குறிக்கோளாகும். காரணம் இப்படியே சென்றால் இல்லாத மக்களுக்காக எதற்கு தீர்வு எனவும் இன்னும் காலம் வரும் ஆகையால் தமிழ் மக்கள் இருந்தால்தான் அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் இல்லாத மக்களுக்கு ஏது தீர்வு ஆகவே மக்களை உயிருடனே பாதுகாத்து கொள்வதற்கு முதலில் அவர்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.

நம்பிக்கை மட்டுமே தற்போது தமிழ் மக்களின் நம்பிக்கையாக இருக்கின்ற நிலையில் நாளைய தினம் குறித்த கேள்விகளுடன் ....

பெரு.சு